மதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா. (படங்கள்)

0
674

– பிறவ்ஸ்

இந்திய தேசிய உணர்வை பாரத மாதா என இந்து மத உணர்வுடன் சுருக்கிப் பார்ப்பதை சிறுபான்மை சமூகங்கள் அங்கீகரிக்கவில்லை. வந்தே மாதரம் பாடல் வரிகள் மத அடிப்படையில் இருப்பதால் அதை தேசியக் கீதமாக கொள்ளமுடியாதென, தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

தாகூரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட வங்க காங்கிரஸ், வந்தே மாதரத்திலுள்ள மத அடிப்படையிலான கருத்துகளை நீக்கியது. இதை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவை இந்து கொள்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்பினர். இதன் பின்னர்தான், 1923இல் இந்துத்துவ கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், வந்தேறு குடிகளான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இந்தியர்கள் அல்லர் என்ற கொள்கை வலுத்தது. இந்துஸ்தான் என்பது புனிதமான தெய்வத்தின் மகள் என்று கருதினார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நிகழ்வுகளின்போது தேசியக் கொடியை ஏற்றாமல் காவிக் கொடியை ஏற்றி தங்களது மதவெறியை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.

இவ்வாறு பாராட்டி, சீராட்டி வளர்க்கப்பட்ட இந்துத்துவ கொள்கைதான் இன்று அழகிய காஷ்மீர் ரோஜாவை கருவறுத்து இந்திய தேசத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. இந்தியாவில் தலைவிரித்தாடும் மதவெறி மற்றும் ஜாதி வெறி அரசியலில் இருந்துகொண்டு, எப்போது வல்லரசாவோம் என்று கேட்பது நகைப்புக்குரியது.

கருக்கப்பட்ட காஷ்மீர் ரோஜா

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயதுடைய ஆஷிபா பானு ஜனவரி 10ஆம் திகதி காணாமல் போனாள். இரண்டு நாள்கள் கழித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 8 வயதான உங்கள் மகள் ஒரு பையனோடு ஓடிப்போயிருக்கலாம். ஆகவே, நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள் என்று தந்தையிடம் பொலிஸார் கூறியுள்ளனர்.

17ஆம் திகதி காலை ஆஷிபாவின் தந்தையான முகம்மது யூசூப் புஜ்வாலா வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது, அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஓடிவந்து, ஆஷிபா பானுவின் சடலம் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ராஸன்னா எனும் காட்டில் கிடப்பதாக சொன்னார். அவர் பதறியடித்துக்கொண்டு மகளைத் தேடியோடினார்.

குதிரைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லும்போது ஆஷிபா கடத்தப்பட்டிருக்கிறார். அவளின் உடல் முழுவதும் மனித பற்கள் கடித்ததற்கான தடையங்கள் இருந்தன. அவளை பலாத்காரம் செய்துவிட்டு கற்கள் வீசி அவள் உடலை சிதைத்திருக்கிறார்கள். அவளது தோல்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிக் காணப்பட்டன.

அதிர்ச்சியூட்டும் அறிக்கைகள்

ஆசிபாவை மதவெறியர்கள் சிதைத்த விதம் மிகக் கொடூரமானது. மருத்துவ அறிக்கையும் பொலிஸ் அறிக்கையும் நமது நரம்பு நாளங்களில் இரத்தம் உரையவைக்கும் அளவுக்கு பதறவைக்கிறது. இப்படியான வக்கிரமத்தை கேள்விப்பட்டாலே நாம் மூர்ச்சையாகிவிடுவோம்.

பொலித்தீன் பையை விரித்து, கோயில் தரையில் இரத்தம் சிந்தாதவாறு முதலில் விரிப்பை ஏற்படுத்தி கற்பழிக்க தொடங்கியுள்ளார்கள். அவள் கத்திவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து போதைமருந்தை கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மயக்கம் தெளிந்தாலும் எழுந்து செல்லக்கூடாது என்பதற்காக கால்களை வளைத்து உடைத்திருக்கிறார்கள். அதேநிலையில் வைத்தே கடைசிவரை சிதைக்கப்பட்டிருக்கிறாள்.

மரணத்தை கூட வலியில்லாமல் கொடுக்கக்கூடாது என்பதற்காக முதலில் கழுத்தை நெறித்துள்ளார்கள். அப்போதும் மூச்சு இருந்ததால் பின் பக்கமாக முட்டுக்கொடுத்து, நெஞ்சு எலும்பை உடைத்திருக்கிறார்கள். அப்போதும் அவள் உயிர் நூலிழையில் ஆடிக்கொண்டிருக்க இறுதியாக கற்களை எடுத்து மண்டையில் அடித்து, மண்டையோட்டை உடைத்து அவள் மூச்சை நிறுத்தியுள்ளார்கள்.

வஞ்சம் தீர்த்த மதவெறியர்கள்

ஆஷிபா சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து இந்து கோயில் ஒன்றில் மறைத்துவைத்து பல தடவைகள் பாலியல் வல்லுறவு செய்ததை டெல்லி தடவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 3 பக்க நுழைவாயில் கொண்டதும், ஒரு நாளைக்கு இரண்டு நேரம் பக்தர்கள் வரும் கோயிலில் வைத்தே ஆஷிபா வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டாள்.

சஞ்சிராம் என்ற ஓய்வுபெற்ற வருமானவரி துறை அதிகாரி, இந்த சம்பவத்தில் மூளையாக செயற்பட்டுள்ளார். சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலை இவர்தான் நிர்வகித்து வந்தார். 15 வயது சிறுவன்தான் சிறுமியை கோயிலுக்கு அழைத்து வந்தான். பின்னர் அவளை கோயிலில் வைத்து கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்.

காணாமல்போன ஆஷிபாவை கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிதான் தீபக் ஹஜூரியா. கோயிலில் வைத்து கற்பழிக்கப்பட்ட சிறுமியை கண்டுபிடித்தும், அவளை பெற்றோரிடம் மீட்டுக்கொடுக்காமல் அவனும் சேர்ந்துகொண்டு பிஞ்சு மீது காமவெறியைத் தினித்தான். ஆஷிபாவை கோயிலுக்கு அழைத்துச் சென்ற 15 வயது சிறுவன்தான் அவளை அடித்து கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இமலயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் முஸ்லிம் நாடோடி சமூகம் குஜ்ஜர் என அழைக்கப்படுகிறது. குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவை விட்டு வெளியேற வைக்கவேண்டும் என்பது கொலையாளிகளின் நோக்கம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்முவின் மக்கள் தொகை சமன்பாட்டை குஜ்ஜர் சமூகம் மாற்றுவதாக கொலையாளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அங்கூர் ஷர்மா கூறியுள்ளார்.

நல்லடக்கத்திலும் குழப்பம்

குஜ்ஜர்கள் வாங்கி மையவாடியாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஆஷிபாவின் உடலை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது, அங்கு புதைத்தால் வன்முறை வெடிக்கும் என்று இந்து வலதுசாரிகள் அச்சுறுத்தியதாக தந்தை கூறுகிறார்.

இதனால், 10 கிலோ மீற்றர் தூரம் நடந்துசென்று வேறொரு கிராமத்தில் நல்லடக்கம் செய்ததாக அவர் மேலும் கூறுகிறார். ஆஷிபாவின் உடலை நல்லடக்கம் செய்துவிட்டு ஊருக்கு திரும்போது, இந்துத்துவவாதிகளின் பேச்சைக் கேட்டு அந்த ஊரின் தண்ணீர், போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டன.

பெற்றோரின் கதறல்

புஜ்வாலா – நசீமா தம்பதிகளின் மகள் மனீகா. மைத்துனர் அக்தாரின் இரண்டு பெண் பிள்ளைகளும் சில வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த ஆஷிபாவை மனைவி நசீமாவின் வேண்டுகோளுக்கிணங்க புஜ்வாலா தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

ஆஷிபாவை ஒரு பாடும் பறவை என்றும் மான்போல என்றும் வருணிக்கும் நசீமா, தாங்கள் பயணத்தில் இருக்கும்போது ஆஷிபாவே மந்தையை பார்த்துக் கொண்டதாக கூறுகிறார். அதனாலேயே அவள் தங்கள் சமூகத்தின் செல்லப் பிள்ளையானாள் என்றும் தங்கள் பிரபஞ்சத்தின் மையம் அவளே என்றும் கூறுகிறார் நசீமா.

நாடோடிகளான நாங்கள் எங்களின் பூர்வீக இந்த மலை கிராமத்தைவிட்டு செல்கின்றோம். ஆஷிபாவின் ஜனாஸா நல்லடக்கம் உட்பட அனைத்தையும் இந்தக் கிராமம் தடை செய்துவிட்டது என்று உள்ளம் குமுறுகிறார் தந்தை புஜ்வாலா.

10 கிலோ மீற்றர் தூரம் சென்று மகளை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த பின்னர், பாசிச இந்துத்துவவாதிகளின் பேச்சைக்கேட்டு ஊரிலுள்ள தண்ணீர், போக்குவரத்து வசதிகளை நிறுத்திவிட்டனர். எங்களால் இப்போது அந்தக் கிராமமும் சிரமம்படுகிறது.

என் மகளுக்கு இந்து, முஸ்லிம் என்றால் என்னவென்று தெரியாது. அவள் பசி தாங்கமாமல் ஓங்கி அழுதுவிடுவாள். குதிரைதான் அவளுக்கு நண்பன். அந்த குதிரைக்கு இவளது நிலை தெரியாது. கோயில் புனித தளம் என்று எனக்கு தெரியும். அதனால்தன் நான் அங்கு சென்று எனது மகளைத் தேடவில்லை.

8 பேர் 8 வயதுடைய என் பிள்ளையை சீரழித்து, இந்த கிராமமே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதை விளங்கமுடியவில்லை. நாங்கள் என்ன பாவம் செய்தோம். நாடோடியான நாங்கள் இங்கிருக்க விருப்பமில்லை. எங்கள் வீட்டில் திருமண நிகழ்வொன்று இருந்தது. அப்போது அவளுக்காக புதிய ஆடை வாங்கி தருவதாக கூறினேன். அதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை என்று ஆதங்கப்படுகிறார்.

குற்றவாளிகள் கைது

ஆஷிபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு 6 நாட்கள் கழித்து, ஜனவரி 23ஆம் திகதி மாநில குற்றப்பிரிவு பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி. விசாரணையின் பின்னர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, அவரது மகன், 4 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 15 வயது சிறுவன் உட்பட 8 பேர் ஆஷிபா கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி சாஞ்சி ராம் (வயது 60), பொலிஸ் அதிகாரிகளான சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக்ராஜ் மற்றும் தீபக் ஹஜூரியா ஆகியோர் உதவியோடு இந்த குற்றத்தை திட்டமிட்டு செய்ததாக விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாஞ்சி ராமின் மகன் விஷால், இளைய வயதினரான அவரது சகோதரி மகன் ஆகியோரும் வன்புணர்வு மற்றும் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனான விஷால் ஜன்கோத்ரா சம்பவ தினத்தன்று உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் ஆள் மாறாட்டம் செய்து பி.எஸ்.சி. பரீட்சை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளுக்கு ஆதரவு

இது தொடர்பாக 8 இந்துக்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்து வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கைதுகளை எதிர்த்து ஜம்முவில் போராட்டங்கள் நடந்தன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பொலிஸார் நீதிமன்றத்தில் நுழைவதை வழக்கறிஞர்களே தடுக்க முயன்றனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் ஆகிய இவரும் பங்கேற்றனர். இதன்பின்னர் ஏற்பட்ட மக்கள் அழுத்தத்தினால் இருவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மன்ச் என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது. அத்துடன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடியது. இதுன்போது, குற்றவியல் தனிப்படையின் விசாரணைக்கு தடையாகவும் இருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

தப்பிப்பதற்கான முயற்சிகள்

ஆஷிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தமை தடவியல் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதனை குற்றவியல் தனிப்படைக்குழு விசாரித்து உறுதிப்படுத்தியது. தீபக் ஹஜூரியா உள்ளிட்ட சில பொலிஸ் அதிகாரிகள் இரத்தம் தோய்ந்த ஆஷிபாவின் ஆடைகளை துவைத்த பின்னர் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியதாக புலனாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

விசாரணையை குற்றப்பிரிவிடம் ஒப்படைப்பதற்கு முன்னர், அதைனை கையாண்ட பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்குவதற்காக குற்றவாளிகளில் ஒருவனான சஞ்சி ராம் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாவை எடுத்த சாட்சியத்தை அழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணத்தினால் தலைமை பொலிஸ் அதிகாரிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை பொலிஸ் தரப்பிலுள்ள குற்றவாளிகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வழக்கறிஞருக்கு கொலைமிரட்டல்

ஆஷிபாவுக்கு நீதி கேட்டு போராடும் தீபிகா எஸ். ரஜாவத் என்ற பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நான் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை. என்னை பலாத்காரம் செய்யக்கூடும் அல்லது மானபங்கப்படுத்தக்கூடும். உன்னை மன்னிக்க மாட்டோம் என்று மிரட்டி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவள் என்பதால் அவளுக்கு நான் வாதாடக் கூடாதாம். அப்படிச் செய்தால் நான் ஒரு தேசத்துரோகியாம். இதையெல்லாம் கேட்கும்போது நான் வெட்கித் தலைகுனிகிறேன். 8 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் கொண்டுவர போரடும்போது சாதி, மதம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

நான் ஆபத்தில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கில் இருந்து நான் விலக போவதில்லை என்று தீபிகா தெரிவித்துள்ளார்.

நீதிகோரும் கண்டனக் குரல்கள்

ஆஷிபா கோயிலில் வைத்து கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதால், இந்துக் கடவுளுக்கு உயிர் இருந்தால் அவர் இதனை பார்த்துக்கொண்டு இருப்பாரா, தமிழன் என்று சொல்வதில் தலைகுனிகிறோம் என்று பல இந்துக்களே மனிதாபிமான முறையில் கண்டனங்களை சமூக ஊடகங்களில் கொட்டித் தீர்த்தனர்.

இந்துத்துவ கொள்கையுடைய ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வசைபாடிய இந்தியர்கள், நாடுதழுவிய ரீதியில் ஆஷிபா கொலையை கண்டித்திருந்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஹிந்துஸ்தானாக இருப்பதில் வெட்கப்படுகிறேன். ஆஷிபா மரணத்துக்கு நீதிவேண்டும் என்று பல திரை நட்சத்திரங்கள் குரல்கொடுத்திருந்தனர்.

கேரளாவில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் விஷ்ணு நந்தகுமார் என்பவர், “அவள் கொல்லப்பட்டது நல்லது. இல்லையெனில், நாளை அவள் இந்தியாவுக்கு எதிராக மனித குண்டாக உருவெடுப்பாள்” என்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளினால் குறித்த அதிகாரி வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

கேரளாவில் கோழிக்கோட்டில் ஊடகவியலாளர் ஒருவர் தனது மகளுக்கு ஆஷிபா என பெயர்சூட்டியுள்ளார். இத்தகவலை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். நீதிக்கு குரல்கொடுக்கும் வகையில் கொல்லப்பட்ட சிறுமி ஆஷிபாவின் பெயரை தனது மகளுக்கு சூட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை உறுதிசெய்ய சட்டம் கொண்டுவரப்படும் என்று ஜம்மு காஷ்மீரில் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

வாய்திறந்தார் பிரதமர் மோடி

கடந்த 13ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்புவிழாவில் பங்கேற்று உரையாற்றியபோது மோடி உணர்ச்சிவசப்பட்ட ஆவேசத்துடன் பேசினார். கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் சம்பவங்கள், நாகரீக சமுதாயத்தின் அங்கமாக இருக்க முடியாது. இச்சம்பவங்களுக்கு நம் அனைவருக்கும் வெட்கப்படுகிறோம்.

பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என நான் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த சம்பவத்தில் முழு நீதி கிடைக்கும். நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். பலாத்காரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகியவை நம் சமுதாயத்தில் இருந்து விலக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், சமூக மதிப்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால், எங்ககே சென்றிருந்தாய் என கேட்கும் நாம், அதே கேள்வியை, இரவு நேரத்தில் தாமதமாக வரும் மகனிடம் நாம் கேட்கவேண்டும். குடும்ப அமைப்பையும், சமூக மதிப்புகளையும், சட்டம் ஒழுங்கையும் நாம் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மோடியின் இந்த பேச்சு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நவமணி 20.04.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here