அபிவிருத்திக் குழுவினரின் முயற்சியின் பயனாக மீராவோடை வைத்தியசாலைக்கு தாதி ஒருவர் நியமனம்

0
190

(எம்.ரீ. ஹைதர் அலி) 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு தாதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி முஸ்தபாவின் தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியின் பயனாக இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. கிரேஸ் நவரட்ணராஜாவை அபிவிருத்திக் குழுவினர் 2018.02.19ம் திகதி மட்டக்களப்பு காரியாலயத்தில் சந்தித்து இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது இவ்வைத்தியசாலைக்கு வைத்தியர்கள், தாதியர் மற்றும் சிற்றூழியர்கள் தேவைப்பாடாகவுள்ள நிலையில் இதற்கான நியமனங்களை துரித கதியில் பெற்றுத்தருமாறு அபிவிருத்திக் குழுவினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இது விடயமாக தான் கவனம் செலுத்துவதாகவும், இது தொடர்பில் தான் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தன்னால் முதலில் தாதி ஒருவரை நியமித்து தருவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வாக்குறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இவ்வைத்தியசாலையில் இரண்டு தாதியர்கள் கடமையாற்றி வந்தநிலையில் வைத்திய பொறுப்பதிகாரி முஸ்தபாவின் தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியினால் சென்ற மார்ச் மாதம் முதல் இவ்வைத்தியசாலைக்கு தாதி ஒருவர் நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருகின்றார்.

இந்நியமனத்தை பெற்றுத்தந்தமைக்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினர் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here