தொடரும் காட்டிக் கொடுப்புகளும் முஸ்லிம் தலைமைகளின் அவசரக் கடமையும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இலங்கைத் திருநாடு அல்லோலகல்லோலப்பட்டு தனது அமைதியை இழந்து நிற்கின்ற இந்த துர்ப்பாக்கிய சூழலில் முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் செய்த கொடூர செயல் காரணமாக முஸ்லிம் சமுதாயம் பல்வேறு வழிகளிலும் பல இழப்புக்களை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறது.அவர்களது உயிர் , உடமை, பண்பாடு ,எதிர்கால வாழ்வு என்பன சூனியப் பட்டுக் கிடக்கின்றன.

இந்த நிலையில் இலங்கையின் பொலீசாரும் முப்படையினரும் பயங்கரவாதிகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களை அழிக்கும் நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்தில் செய்து முடித்துள்ளனர். ஆயினும் மழை விட்டும் தூவானம் முடியவில்லை என்ற வகையில் தொடரும் அவசரகால சட்ட நிலைமையை பயன்படுத்தி ஒரு பக்கம் இனவாதிகளால் முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி, பொருளாதாரம், அரசியல், பண்பாடு, என்பன இலக்கு வைத்து துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன .மறு பக்கம் முஸ்லிம் சமூகத்திலுள்ள சில சுயநலமிகளும் சந்தர்ப்பவாதிகளும் சக முஸ்லிம் சகோதரன், சகோதர அமைப்பு, சகோதர இயக்கம் மீது கொண்ட தமது பகைமையையும் வெறுப்பையும் முடிவுறா குரோதத்தையும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இந்த நிலைமைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஷீயா சுன்னி மோதல்கள் ,இயக்க மோதல்கள், தரீக்கா மோதல்கள் காரணமாக ஒவ்வொருவரும் மற்றவரை காட்டிக்கொடுத்தும் பழிதீர்க்க வரிந்து கட்டிச் செயற்பட்டுக் கொண்டுமிருக்கின்றனர் .சிலர் மற்றவர்களை போட்டுக் கொடுப்பதற்காக பைல்களுடன் பொலிஸ் நிலையம், இராணுவ முகாம், புலனாய்வுப் பிரிவு, அரசியல் வாதிகளின் அலுவலகங்கள் என இரவு பகலாக ஏறி இறங்கித் திரிகின்றனர். இதனால் ஏற்படுகின்ற மிகப் பெரும் அபாயத்தை உணராதவர்களாக செயற்படும் இத்தகையோரது செயற்பாடு
மிக வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் .இக்காட்டிக் கொடுப்பு துரோகத்தன செயற்பாடுகளில் சில இடங்களில் தரீக்காவாதிகளும் சில இடங்களில் ஷீஆக்களும் சில இடங்களில் அத்வைதிகளும் சில இடங்களில் இயக்கவாதிகளும் சில இடங்களில் அனைவரும் கைகோர்த்தும் களமிறங்கியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை போலீசாரும் முப்படையினரும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பயங்கரவாதிகள் 95 வீதமானோர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு எதிரான முப்படைகளினதும் பொலிஸாரினதும் செயற்பாடு ஒரு வாரத்திலேயே முடிந்து விட்டது என தெரிவித்து இருக்கின்ற நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் கிராமங்களிலும் சுற்றிவளைப்புக்கள், தேடுதல்கள், கைதுகள், திடீர் பரிசோதனைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் எது வித நியாயமும் இன்றி ஒவ்வொரு கிராமத்திலும் நாள்தோறும் முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்கின்றனர் .இந்த நிலைக்கு பிரதான காரணம் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள கயவர்களும் கோடாரிக்காம்புகளும் தான்.இத்தகைய செயற்பாடு அனைத்து முஸ்லிம்களாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் .இவ்விடயத்தில் சில முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சந்தர்ப்பம் பார்த்து தமது அரசியல் மற்றும் கருத்தியல் எதிரிகளை பழி தீர்க்க அவர்களுடன் இணைந்து ஒத்து ஊதி வருகின்றனர்.

உண்மையில் இந்த நிலை தொடருமாக இருந்தால் ஓரிரு மாதங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெறும் சந்தேகத்தின் பேரில் எதுவித நியாயங்களும் இன்றி கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் அவலம் ஏற்படும்.அவசர கால நிலை காரணமாக விசாரணைகள் எதுவுமின்றி பல மாதங்கள் தடுத்துவைக்கபபட முடியும். இதனால் கயவர்கள் சிலருக்கு ஆத்மார்த்த திருப்தி ஏற்பட்டாலும் முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியான வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்படும். பாதிக்கப்படுபவர்களின் குடும்பநிலை, பொருளாதாரம் சவாலுக்கு உட்படுத்தப்படும்.

இதன் விபரீதத்தை உணர்ந்து முஸ்லிம் சமுதாயத்திலுள்ள இத்தகைய சந்தர்ப்பவாதிகளை கட்டுப்படுத்த முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைமையாக தன்னை அடையாளப்படுத்தியுள்ள ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை .ஒரு சில முஸ்லிம் அரசியல், ஆன்மீக தலைமைகளின் அறிவுறுத்தல்கள், கண்டனங்கள் இருந்தபோதும் இவை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் கண்டமாக ஒலிக்கவில்லை. கட்டாயம் ஜம்இய்யத்துல் உலமா இந்த விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்குவதோடு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து இவ்விடயத்தில் முஸ்லிம் சமுதாயத்துக்கு அவசரமான வழிகாட்டல்களை வழங்க கடப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள்.

இந்த அவசர கால சூழ்நிலையில் இந்த பொறுப்பை முஸ்லிம்களது இரண்டு தலைமைகளும் செய்யத் தவறுமாயின் பாதிக்கப்படுபவர்கள், அவர்களது குடும்பங்கள் சார்பாக வேறு வகையான விரக்தியும் தீவிர உள்ளக பூசல்களும் தலை எடுக்க வாய்ப்பு உள்ளது. இது மேலும் எமது இயல்பு நிலையை பாதிக்கும். எனவே இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் அனைத்து கோபதாபங்களையும் மறந்து ,இயக்கச் சண்டைகளை தூக்கி எறிந்துவிட்டு, முஸ்லிம் சமுதாயமாகிய நாம் ஒன்றித்துப் பயணிக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் உள்ளோம் .

நாம் இத்தருணத்தில் பிரிந்து நின்று, சந்தர்ப்ப வாதம் பேசி, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து, கயமைத்தனம் செய்வோமாயின் இதனால் பாதிக்கப்படப்போவது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமே என்பதை தமது வெறுப்பையும் பகையுணர்வையும் மனங்களில் நிரப்பிக் கொண்டு பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் கீழ்நிலை புத்தி கொண்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த ஆபத்தான சூழ்நிலை உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் திட்டமிட்ட காய்நகர்த்தல்களில் உள் நாட்டு இனவாத சக்திகளின் திரைமறைவிலான அரசியல் நிகழ்ச்சி நிரலின் விளைவு என்பதை மறந்துவிடலாகாது. இத்தகைய அரங்கேற்றங்கள் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் இருப்பு ,அவர்களின் பொருளாதாரம், அவர்களது கல்வி, அவர்களது பண்பாடு, அவர்களது புத்திஜீவிகள், அவர்களது அரசியல் தலைமைகள், அவர்களது இஸ்லாமிய கல்விக் கூடங்கள், அவர்களது இஸ்லாமிய அமைப்புக்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இவ்வளவு நடந்த பின்னரும் நாம் உணராமல் இருப்பது மிகப்பெரும் மடமையாகும்.

இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு பாதிப்பு வரும்போது அது நிச்சயம் இயக்கம் பார்த்தோ, அமைப்பு பார்த்தோ, அரசியல் கட்சி பார்த்தோ வருவதில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்தகால நிகழ்வுகள் எதுவும் இயக்கம் பார்த்து, ஆள் பார்த்து செய்யப்படவில்லை. அனைத்தும் முஸ்லிம்கள் என்ற பார்வையில் தான் அரங்கேறியிருக்கின்றன.
எனவே முஸ்லிம் சமுதாயத்தில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கின்ற இந்த காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உடனடியாக ஜம்இய்யத்துல் உலமாவும் அரசியல் தலைமைகளும் அவசரமாக அவசியம் களமிறங்க வேண்டும். தாமதித்தால் இதனால் பாதிக்கப்படப்போவது முழு முஸ்லிம் சமுதாயமுமே என்பதோடு இத்தீச் செயல் காரணமாக தாம் எதிர்பார்த்ததை விட அதிக இலாபங்களை இனவாத சக்திகள் அடைவார்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் இன்றே புரிந்து செயற்பட முன் வருவோமாக.

-அபூ அப்துல்லாஹ் –

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *