மௌலவிமார்கள் தொடர்ந்தும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதில் சிக்குண்டவர்களாகவே உள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

சமூக நலன்களை முன்நிறுத்தி முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஓரணியாகத் திரண்டு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து   ஒன்றுபட்டு பதவியை துறந்த நேரத்தில் சமய விடயங்களில் ஈடுபடக் கூடிய ஒரு சில குறித்த மௌலவிமார்கள் மத்தியில் இன்னும் ஒற்றுமைத் தன்மை காணப்படவில்லை தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதில்  சிக்குண்டவர்களாகவே  உள்ளனர். குற்றங்கள் சுமத்துவது என்பது தீர விசாரணையின் பின் குற்றங்கள் சுமத்துவது தான் பொருத்தமாகும், குற்றங்கள் நிரூபிக்காமல் வெறுமனே கற்பனையில் குற்றங்கள்  சுமத்துவது  என்பது ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் நோக்கமே எனினும் இந்த நிலை நீடித்தால் சமூக நலனைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள்  ஒன்றிணைந்து பதவி துறந்த விடயம் தொடர்பில் எத்தகைய அர்த்தங்களும் இல்லாமற் போய்விடும் என்கின்ற ஐயப்பாடு நிலவுதாக முன்னாள் முஸ்லிம்  சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள செய்தில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்நாட்டின் நலனுக்காகவும் தமது சமூகத்தின் இருப்புக்காகவும் பாதுகாப்புக்காவும் அவசியமென உணர்ந்து தம் பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் அவர்களுடைய எதிர்காலத்தையும்  எல்லாம் துச்சமாக மதித்து பதவிகளை துறந்துள்ளார்கள். சமூக ரீதியான ஒற்றுமை மலர்ந்துள்ள இந்த தருணத்தில் அருண என்ற சிங்கள பத்திரிகையில் குறித்த மௌலவி ஒருவர் வழங்கிய பேட்டியில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியுள்ளார்.
இந்நாட்டில் மிகவும் அச்சுறுத்தலான  இத்தனை கசப்பான அனுபவங்களைக் எதிர்நோக்கியும்  சமூக நலனை முன்னிறுத்தி குறித்த மௌலவி ஒன்றுபட்டுச் செயற்படாமல் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்குவதில் ஈடுபடுவதென்றால்,  இவர்களுக்கு நபி  (ஸல்) அவர்கள் போதித்த மார்க்கத்தின் பயன் என்ன? கலிமா சொன்னவர்கள் அனைவரும் ஒரு முஸ்லிம் உம்மாவின் கீழ் ஒன்றுபட வேண்டியவர்களே .சொந்த விருப்பு வெறுப்புக்களுக்காக பழி தீர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது வேதனை தரும் விடயமாகும்.
ஒரு சிங்கள சகோதாரப் பத்திரிகைக்கு பேட்டி வழங்கும் போது  சமூக நலனைக் கருத்திற் கொண்டு உண்மைத் தன்மையுடன் பேட்டி வழங்குதல் வேண்டும். இக்கட்டான இந்த கால கட்டத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்குவது தொடர்பில் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். இதன் மூலம் சமூக நலனுக்காக ஒன்று பட்ட விசயம்  கூட ஒரு பயனும் இல்லாமல் அது வீணாகிப் போய் விடுமோ என்ற அச்சம்  கூட நிலவுகின்றது.
அரசியல் தலைமைகள் சமூக நலன் நாடி ஒன்றுபட முடியுமென்றால் சமூகத்துக்கு வழிகாட்டக்  கூடிய குறித்த மௌலவி ஒருவர் என்னுடைய சகோதரரை மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் சகோதரர்களையும் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி  பழிவாங்குவதிலும் விமர்சிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றார். இது தொடர்ந்து நீடித்தால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை பேணிப்பாதுகாப்பது தொடர்பில் நாம் தோல்வியான சூழலை எதிர்நோக்க வேண்டி வரும்.  பெரும் பாதிப்பு ஏற்பட சாத்தியப்பாடுகள் உள்ளன. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி செய்வது போன்ற தீய செயற்பாடுகளில் இந்த மௌலவி ஈடுபட்டுள்ளார்.
இதற்கு நாங்கள் இடம்கொடுக்கக் கூடாது. குறுகிய இலாபமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக எமது சமுதாயத்தை அடுத்தவர்களிடம்  இல்லாத பொல்லாதவைகளைச் சொல்லி சிங்களப் பத்திரிகைக்கு பேட்டி வழங்கியுள்ளார்.  இது சமூக ஒற்றுமைக்கு  ஆரோக்கியமான விடயமல்ல. பிளவுகளையும் பிரிவினைகளையுமே ஏற்படுத்தும்.
சமூக நலனில் பாதுகாப்புக்காக அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து  முஸ்லிம் அரசியவதிகள் ஒன்றுபட்ட போன்று சமூகத்திலுள்ள இப்படியான குறித்த மௌலவி  நிதானமாகச்  சிந்தித்து சமூகத்தின் நலன் கருதி அக்கறையுடன்  ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இந்நாட்டின் பாதுகாப்புக் கருதி தீவிரவாதச் செயற்பாட்டுடன் தொடர்பு பட்டவர்களைப் பற்றி சொல்வதில் எத்தகைய தவறுகளும் இல்லை. ஆனால் எந்தவிதமான குற்றங்களும் செய்யாமல் அப்பாவி முஸ்லிம்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக செய்திகளை பரப்புவர்கள்  மீது நிச்சயமாக அல்லாஹ் சாபத்தை உண்டு பண்ணுவான்.
எனவே சிறு சிறு கருத்து முரண்டுபாடுகளுக்காக யாராவது சரி எமது சகோதர முஸ்லிம்கள்  மீது பழிகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டாம். இது நல்லதொரு விசயம் அல்ல.  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லா மௌலவிமார்களுக்கும்  உரியது. இதில் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் மற்றவர்களை விரல் நீட்டி இலாபம் தேடும் பயணம்  பயனற்றது. இதை விட்டு விடுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(ஊடகப் பிரிவு)
இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *