அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் பலியானார். இதனை இனவெறி தாக்குதல் என கூறி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ கவுண்டியில் உள்ள போவே நகரில் யூத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. யூதர்களின் புனித தினமான பஸ்கா பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஏராளமான யூதர்கள் இந்த வழிபாட்டு தலத்துக்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் வழிபாட்டு தலத்துக்குள் நுழைந்தார். அவர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் துளியும் ஈவு, இரக்கம் இல்லாமல் அந்த வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி உள்பட 4 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் யூத வழிபாட்டு தலத்துக்கு விரைந்தனர். அவர்கள் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த நபர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு 4 பேரில் ஒருவரான பெண் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், காரில் தப்பி சென்ற வாலிபரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றினர்.

விசாரணையில் அவரது பெயர் ஜான் எர்னஸ்ட் (வயது 19) என்பதும், பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்து இருக்கிறது. தாக்குதலுக்கான பின்னணி குறித்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஜான் எர்னஸ்ட், தாக்குதலுக்கு ‘ஏ.ஆர்.15’ ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளார். அமெரிக்காவில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது ஒரு இனவெறி தாக்குதல் போல தெரிகிறது. யூத விரோதம் மற்றும் இனவெறி ஆகியவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது. அவை கட்டாயமாக வீழ்த்தப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களோடு எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்த அமெரிக்காவின் இதயமும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருக்கிறது. அவர்கள் விரைவில் இந்த துயரத்தில் இருந்து மீள இறைவன் அவர்களை ஆசிர்வதிப்பார்” என தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் இதுபோன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *